Description
"ஆன்மீக யாத்திரை", ஆன்மீகமான தலங்களை பற்றி விரிவாக எடுத்துக் கூறும் ஒரு தொகுப்பாகும்.. இந்த நூலில், மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் கோவில்கள், பூரி ஜகந்நாதர், குருவாயூர் கோவில், குருக்ஷேத்திரம், சார்தாம் யாத்திரை ஆகிய ஆன்மீக தலங்களின் பயணத்தையும், அவற்றின் பூர்வாங்க வரலாற்றையும், தொன்மையான ஆன்மிகத்தையும் விரிவாக ஆராய்ந்து எழுதப் பட்டுள்ளது.
இந்த புத்தகம் நம் நாட்டின் சிறப்பான, பிரபலமான, புண்ணியம் தரும் தலங்களுக்குச் செல்லும் விவரங்களை எடுத்துக் கூறுவதுடன், ஆலயங்களின் சிறப்பையும், தரிசனம் பற்றிய விவரங்களையும் ஆன்மீகத்தின் சிறப்பையும் புரிந்துகொள்ள ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
சிறு வயது முதலே என் அம்மா கொடுத்த ஊக்கத்தினால் இசை, கோலம், கைவேலைகள், தையல், சித்திரம் வரைதல், சமையல் என்று எல்லா கலைகளும் கற்றுக் கொண்டேன்.
திருமணத்திற்கு பின் வங்கி அதிகாரியான கணவரின் மற்றும் குழந்தைகள் வேலை காரணமாக நான் உத்தர பிரதேசம் ,மத்ய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தபோது அவ்வூர் மனிதர்களுடன் பழகி அவர்கள் மொழி, சமையல் வகைகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை மங்கையர் மலர் இதழில் பிரசுரமாகி, அதற்கான சன்மானமாக பத்து ரூபாய் மணி ஆர்டரில் கிடைத்தபோது என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அந்த மணி ஆர்டர் ரசீது இன்னமும் என்னிடம் உள்ளது!
நான் பல்வேறு தமிழ் இதழ்களுக்கு என் அனுபவம் மற்றும் சமையல் குறிப்புகளையும், நிறைய ஆலயங்கள் பற்றிய விபரங்களையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளேன்.
இந்த ஆன்மீக யாத்திரை தொகுப்புகளுக்கான புத்தகம் வெளியிடும் யோசனை என் கணவருடையது. எனது சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே அமேசான் Kindleல் 'சிறுகதைக் களஞ்சியம்' என்ற தலைப்பிலும், சமையல் குறிப்புகள் முதல் மற்றும் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் 'சமையல் களஞ்சியம்' என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளது.