Description
இசை, நடனம் போன்று ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையல் கலையும் ஒன்று. ஆர்வத்துடனும், சரியான அளவு சாமான்களை சேர்த்தும் செய்யும் சமையல் மிக ருசியாக இருக்கும். எப்பொழுதும் வீட்டில் இனிப்பு, காரங்களை செய்வதால் , ஆரோக்கியமாக இருக்கலாம்.
இக்காலத்தில் எல்லா பட்சணங்களும் கடைகளில் தயாராகக் கிடைப்பதால் இக்காலப் பெண்களின் ஆர்வம் சமையலில் சற்று குறைந்து விட்டது. ஆனாலும் நம் கையால் சமைத்து அதன் சுவையை நம் குடும்பத்தார் பாராட்டும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடில்லை.
ஆறு சுவைகளில் இனிப்புச் சுவையே பெரும்பாலானவர்களுக்குப் பிடித்த சுவையாகும்!
இப்புத்தகத்தில் நான் எழுதியுள்ள இனிப்பு வகைகளை செய்வது சுலபம்!
ஒவ்வொரு ஊரிலும் சிறப்பான இனிப்புகள் உண்டு.
பண்டிகைகளின் போது செய்யும் இனிப்புகளுடன், வெளி மாநில இனிப்புகளையும் எழுதியுள்ளேன். ஒவ்வொரு இனிப்பும் உங்கள் வாழ்வில் இனிய தருணங்களில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்! செய்து ருசித்து மகிழ வாழ்த்துக்கள்!
தரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு, பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து, ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம்! புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர்! பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. நாற்பது வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும்! அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்… நிறைய அனுபவங்கள்… வாழ்க்கைப் பாடங்கள்! இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி! ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்... அடுத்து முக்கிய இடம் வகிப்பது எனது சமையல் கட்டுரைகள்.
ருசியான சமையலை ரசித்து செய்வது எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக் கால பாரம்பரிய சமையலோடு, வெளி மாநில, வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும். என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான, வித்தியாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டு!