You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
எனக்கு என் கண்களில் படும் சிறு சிறு விடயங்களும் மனதில் ஏதாவது சொல்லிக் கொண்டேயிருக்கும்.
உதாரணமாக மரம் முழுவதும் இலைகள் இருந்தாலும், அவை அசைந்தாடினாலும் சொல்லாத அழகை அதே மரத்தில் உள்ள எல்லா இலைகளும் அமைதியாய் இருக்க, ஒற்றை இலை மட்டும் அசைந்தாடும் போது அந்த இலை என்னுடன் தன் வாழ்க்கையை சொல்ல ஆசைப்படுவது போல தோன்றும்.
இவ்வாறே நான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது எனக்கு வயது பதினான்கு இருக்கலாம். அம்மா அப்பாவை சார்ந்து வாழ்ந்த காலமது. அவர்களுக்கு சரியென படுகிற விடயங்கள் எனக்கு தவறாக தோன்றும். அவர்களது பார்வையில் தவறானவை எனக்கு மிகச் சரியாகத் தோன்றும். அவையும் கவிதைகளாக வெள்ளைத் தாள்களை வண்ணங்களாக மாற்றியிருந்ததாக நான் நினைத்துக் கொண்டேன். பெற்றவர்களுக்கு பதினான்கு வயதில் என்ன கவிதை எழுதுவது..அதிலும் பெண் பிள்ளைக்கு இதெல்லாம் எதற்கு என அனைத்தும் கிழித்து தீ வைத்துவிட்டார்கள்.
காக்கையின் நிறம், நிலவு தேய்ந்து அது சொல்லும் சோகம்..குயிலின் குரலோசை..என நான் எழுத முடியாமல் என்னுள் புதைத்து வைத்திருந்தவற்றை எழுத்தாக எழுதினால் அதனை ரசிக்கும் மனநிலை எவருக்கும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டு.
அத்தனை ரசனைகளையும் அடக்கம் பண்ணினேன்.
கடமைகள் முடிந்து ஓய்ந்த போது தனிமை எனும் தீவில் மாட்டிக்கொண்ட போது..அத் தீவில் சுற்றியுள்ள அனைத்தும் என்னோடு மனம் விட்டு பேச ஆரம்பித்தன.
மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.சில தொடர்கதைகள் எழுத ஆரம்பித்தேன். திடீரென ஒரு நாள் கடல்புறா படிக்க ஆசைப்பட்டேன். ஏனென்றால் சிறு வயதில் கடல்புறா படித்த போது சாண்டியல்யன் கதைகளை படிக்கிற வயசா என பேச்சு வாங்கியது நினைவில் வந்தது. அப்படியென்ன அந்த கதையில் உள்ளது? ஏன் அம்மா வாசிக்க அனுமதிக்கவில்லை என்ற ஆர்வத்தில் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். நான், கீழே வைக்காது வாசித்த ஒரே புத்தகம் கடல்புறா தான்.
எனக்கும் வர்ணனனைகளுடன் தூய தமிழில் ஒரு சின்ன நாவல் எழுத வேண்டும் என்ற ஆசை தொற்றிக் கொண்டது. கதாபாத்திரங்களை உருவாக்கி விட்டு அவர்களுக்கான பெயர்களையும் தீர்மானித்து ஆசைஆசையாக எழுத ஆரம்பித்தேன்.
என் கனவில் எல்லாம் கொன்றை வேலவன் வர ஆரம்பித்தான். வேலுடன் வந்த வேலவன்..சித்திரக்காரியை கொன்று விடாதே எனக்கு வேலவன் என பெயரிட்டாய்..என்னால் இரு பெண்களை சுகமாய் தோளில் சுமக்க முடியும் என வாதம் பண்ணினான். மதிவாணர், அரச வம்சைத் சார்ந்தவரை மணம் முடிக்காது தனது சகோதரன் மகிழ்மாறன் மலைவாழ் சாதியைச் சேர்ந்த சங்கிழையை மணம் முடித்தது தவறு என பல துரோகங்கள் செய்து அவரது இராஜ்யத்தையும் சேர்ந்து அனுபவிப்பதோடு..பல துன்பங்களை தந்தான். அவன் வாரிசின் இறப்பில் தான் அவனுக்கான தண்டனை கிடைக்க வேண்டும் வேலவா என வாதம் செய்தேன்.
ஆனால், கதை எழுத எழுத என் சித்திரக்காரியை மிகவும் நேசிக்க ஆரம்பித்தேன். கடமாவையும் நெஞ்சத்தில் நிறுத்தியிருந்தேன்.ஆதலால் கொன்றை வேலவன் என்னுடன் புரிந்த வாதத்தில் நான் சரணடைந்தேன். வேலவா முதலில் சித்திரக்காரியை மணந்து கொள். கடமா உங்கள் இருவரையும் சேர்ந்து சுமந்து கொள்வாள். சித்திரக்காரி வீரத்திலும், கடமா அறிவிலும் சிறந்து விளங்குவதால் உன்பாடு திண்டாட்டமாக இல்லாமல் உனது கொன்றை இராஜ்யம் உனது தோழி அங்கை மற்றும் சித்திரக்காரியின் உயிரான அவைக்கஞ்சாரின் அதினாவுடன் இணைந்து கடல் தாண்டி உன் இராஜ்யத்தின் எல்லை விரியட்டும் என வாக்களித்து இந்த முதல் பாகத்தை எழுதி முடித்தேன்.
பொங்கி வரும் வங்கடலில் நடுவே நிற்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்த போதும், கொன்றை வேலவா..சித்திரக்காரி உங்களை காதலிக்கிறேன் என கத்தி கூறி மகிழ்ந்ததும் தான் வேலவன் கனவில் வருவதை நிறுத்தினான். இனியும் வருவான்..என் வீரத்தை சங்கிழை அன்னையிடம் அவரின் ஆண் வாரிசை ஒப்படைப்பதின் மூலம் நிரூபித்து எனது இருபுறமும் சித்திரக்காரி, கடமாவை நான் நிறுத்தி கொன்றை வேலவனான நான்..என் இராஜ்ய மக்களின் இல்லங்களில் விருந்துண்ண வேண்டாமா? என கேட்டு வருவான் என எண்ணுகிறேன்.
வாங்க வாசிக்கலாம்.
அன்புடன்,
ரபியா.
கொன்றைவேலவன் என்ற கற்பனை சரித்திரக் கதை தமிழ் கதைகளென்னும் கிரீடத்தில் மின்னும் வைரக்கல்.
ஆரம்பம் முதல் முடிவு வரை பரபரப்பாகப் படிக்கத் தோன்றியது. அழகிய சித்திரம் நம்மிடம் எழுந்து வந்து பேசினால் நம் மனது எப்படித் துள்ளிக் குதிக்குமோ அந்த உணர்வு தோன்றியது.