You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
தற்காலச் சூழ்நிலையைப் பிரதிபலிப்பவையும், நடைமுறையை அனுசரிக்கின்றவையும் ஆகிய எழுத்துக்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வருகின்றன என்ற பலருடைய மனத்தாங்கலை என்னுடைய இந்த நாவலின் மூலம் ஓரளவு போக்க முயன்றிருக்கின்றேன். சமகாலத்தின் சமூகப் பொருளாதார அரசியல் பாதிப்புகளால் தனி மனிதனும் மத்தியதர வர்க்கமும், மாணவர்களும் தொழிலாளர்களும் மத்தியதர வர்க்கத்துக்கும் கீழேயுள்ள ஏழைகளும், எப்படி எப்படி எல்லாம் அலைக்கழிக்கப் படுகிறார்கள் என்பதும், அதிகாரம், பதவி, அரசியல் செல்வாக்கு, நிர்வாக இயந்திரங்கள் எல்லாம் எவ்வாறு பயன்படுத்தப் பெறுகின்றன என்பதும் கதைகளிலோ, கற்பனைகளிலோ, இங்கு நம் நாட்டில் மிகவும் குறைவாகவே இடம் பெறுகின்றன. அரசியலாலும், அதிகார துஷ்பிரயோகத்தினாலும் பாதிக்கப்படாத முனைகளே இன்று தேசத்தில் இல்லை என்றாலும், தமிழ் எழுத்தாளர்களில் பலர் அவற்றோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு படும் கதைகளையும் நாவல்களையும் புனைந்து எழுதத் தயங்குகிறார்கள். அப்படி எழுதுகிறவர்களையும் எழுத முயல்கிறவர்களையும் கூடப் பயத்தோடும், பரிதாபத்தோடும் நோக்குகிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை. அரசியல் சமூக ப்ரக்ஞையுள்ள கேரள எழுத்தாளர்களோ, வங்க எழுத்தாளர்களோ, மராத்தி எழுத்தாளர்களோ இந்தப் பயமும், தயக்கமும் அற்றவர்களாக இருக்கிறார்கள். தமிழ் எழுத்துலகில் மட்டும் ஏன் இந்தத் தயக்க நிலை என்று தெரியவில்லை. கலையைப் படைப்பதற்கும், இரசிப்பதற்கும் நிர்ப்பயமான மனநிலை வேண்டும். அடிமை நாட்டில் கலை வளர்ச்சி இல்லாமற் போவதற்கு இதுதான் காரணமோ என்று தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் நிர்ப்பயமான கலை இலக்கிய வளர்ச்சி பெருக வேண்டும். எழுத்தாளனின் மனவுணர்கள் சுற்றுப்புறத்து அரசியல் பொருளாதார சமூக நிலைமைகளால் பாதிக்கப்பட வேண்டும். காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அப்போதுதான் உருவாகும். அப்படி உருவான ஒரு துணிவான தீவிரமான சமகாலத்து நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சமூக நாவல்தான் 'சத்திய வெள்ளம்'. 1972 ஜூலை முதல் 1973 ஏப்ரல் வரை கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த இந்த நாவல் இப்போது நூல் வடிவில் வெளிவருகிறது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book சத்திய வெள்ளம் ( Sathiya Vellam ).